பாடசாலை வரலாறு

ஈழவள நாட்டின் சிரசெனப் போற்றப் படும் யாழ்ப்பாணக் குடாநாடு தமிழர்கள் செறிவாக வாழும் இடமாகவும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் கலை கலாசாரங்களுக்கும் கல்விக்கும் என்றுமே நிகரில்லாத ஓர் புண்ணிய பூமியாக சைவமும் தமிழும் இரண்டறக் கலந்த பிரதேசமாக விளங்கு கின்றது.  யாழ் குடாநாட்டின் வடபால் அமைந்து இருப்பது வடமராட்சி.  இவ் வடமராட்சியானது வடமராட்சி வடக்கு, வடமராட்சி தெற்கு மேற்கு, வடமராட்சி கிழக்கு என்ற மூன்று பிரதேச பிரிவுகளை தன்னகத்தே கொண்டது.

    இத்தகைய வடமராட்சிப் பிரதேசம் இன்று வடமராட்சி கல்வி வலயம் என்ற பிரிவினை மூன்று பிரதேச செயலர் பிரிவு களையும் உள்ளடக்கி அமைந்ததோடு மூன்று பிரதேச செயலர் பிரிவுகளுக்கும் மூன்று கல்விக் கோட்டங்களைக் கொண்டது.  இது கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி என்பனவாகும்.  இவற்றுள் கரவெட்டிக் கோட்டத்தைச் சார்ந்த ஆரம்பப் பாடசாலை களில் ஒன்று எமது பாடசாலை ஆகும்.

    வடமராட்சி என்றால் சிறந்த கல்விமான்களால் நிறைந்த பூமி என்று கூறுவர்.  கல்விக்கும் கலைக்கும் வடமராட்சி நிகரில்லாத பங்களிப்புக்களை வழங்கி நிற்கின்றது.  இந்தவகையில் கல்வியில் உன்னதநிலை பெற்றுள்ள பெரிய பாடசாலைகளும் அவற்றின் ஊட்டல் பாடசாலைகளாக ஆரம்ப பாடசாலைகளும் விளங்குகின்றன.  அந்த வகையில் ஆரம்பக் கல்வியில் வரலாற்று தடம் பதித்து அனைவரும் போற்றுகின்ற தங்கள் பிள்ளைகளையும் சேர்த்துவிட வேண்டுமென பெற்றோர்கள் பலரும் ஆதங்கப்படும் பாடசாலையாக இது விளங்குகின்றது.  இப் பாடசாலையை யாஃ நெல்லியடி மெ.மி.த.க. பாடசாலை என்று அழைப்பதைவிட அரசடிப் பாடசாலை என்ற செல்லப் பெயராலேயே அனைவரும் அழைப்பர்.

    1796 இல் இலங்கைக்கு வந்த ஆங்கிலேயர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் தமது ஆட்சியை நிலை நிறுத்தியபோது ஆட்சி மையமான கொழும்பு அக்காலத்தில் அங்கு வந்த மிஷனரி மாரையும் அவர்களது சபைகளையும் தங்களுடன் வைத்திராது வடக்கு நோக்கியே அனுப்பினர்.  இதனால் யாழ் குடா நாட்டில் தமது ஆதிக்கத்தை செலுத்திய ஆங்கில மிஷனரிகள் பலதரப்பட்ட சேவைகளை எமக்கு சிறப்பாக ஆக்கித்தந்தனர்.  அந்த வகையில் சிறப்பான கல்விக்கு அதுவும் ஆங்கிலக் கல்விக்கு வித்திட்டு ஈழத்து தமிழ் அறிஞர்கள் ஆங்கிலத்தை சரளமாக பேசவும் எழுதவும் வழிசமைத்தனர் என்றால் அது மிகையாகாது.  நாவலர்பெருமான் சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதற்கு அவரது ஆங்கில அறிவு பெரிதும் உறுதுணையாக இருந்தது.  இவரைப் போல பல அறிஞர்களை நாம் குறிப்பிடலாம்.

    ஆங்கிலேயர் தமது சமயக் கருத்துக் களை பரப்புவதற்கு கல்வியை ஒரு கருவி யாக கொண்டனர்.  அவர்களது மிஷனரி களான மெதடிஸ்த மிஷன், அமெரிக்கன் மிஷன் போன்ற இன்னோரன்ன மிஷன் அமைப்புக்களினூடாக சமயத்தை பரப்ப எத்தணித்தனர்.  அவர்கள் அச்சமய நிறுவனத்துடன் இணைந்து பாடசாலைகளை தொடங்கினர்.  தொடக்க காலத்தில் வழிபாட்டிடமே வகுப்பறையாக இருந்ததுடன் ஆங்கிலமும் கிறிஸ்தவமும் சிறப்பாக போதிக்கப்பட்டன.  இந்தவகையில் 1816 ஆம் ஆண்டு மெதடிஸ்த திருச்சபையின் ஆசிய மாநாட்டைத் தொடர்ந்து அருட்திரு சு. ஊயசஎநச அவர்கள் பருத்தித்துறையிலும் ஆரம்பித்து முன்னெடுத்து செல்லும்படி ஈழத்திற்கு அனுப்பப்பட்டார்.

    இந்த செயற்பாட்டின்படி 1826 இல் இலங்கைக்கு வந்த அருட்திரு. பீற்றர் பேசிவல் பருத்தித்துறைக்கு திருப்பணி யாளராக நியமிக்கப்பட்டார்.  இவரது பணிக்காலத்தில் பருத்தித்துறை என அவர்கள் குறிப்பிடும் வடமராட்சியில் பல பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.  அந்தவகையில் கற்கோவளம், புலோலி, தம்பசிட்டி, தட்டாதெரு, மந்திகை, அல்வாய், கட்டைவேலி, நவுண்டில், துன்னாலை, கரவெட்டி, நெல்லியடி, வதிரி போன்ற இடங்களில் மெதடிஸ்த மிஷன் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

    இத்தகைய பாடசாலைகள் வரிசை யில் எமது பாடசாலையும் உருவாக்கப் பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.  கிடைக்கக்கூடிய தகவல்களின்படி 1829 இல் நெல்லியடி மெதடிஸ்த மிஷன் தேவாலயம் ஆரம்பிக்கப்பட்டு அங்கு வழிபாடுகள் நடைபெற்ற வேளையில் கல்விச் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டதாக கட்டைவேலி சேகரத்தின் ஊடாக கிடைக்கக் கூடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஆனாலும் எமக்கு கிடைக்கக் கூடிய முன்னைய அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்களின் கருத்துக்களை தேடி அறிந்த அளவில் எமது இப் பாடசாலை 1888 இல் பாடசாலை என்ற அந்தஸ்துடன் மெதடிஸ்த மிஷனரிமாரால் தொடங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  இத்தகைய ஆண்டை நாம் ஆரம்ப ஆண்டாகக் கொண்டு பார்க்கும்போது இன்று 125 ஆண்டுகள் தனது கல்விப் பணி கண்டு உயர்ந்து நிற்கின்றது நம் பாடசாலை என்றால் அது பெரும் சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்.

இற்றைக்கு 125 வருடங்கள் இப் பாடசாலை தனது கல்விப் பணியில் ஆயிரக் கணக்கான மாணவர்களை உள்வாங்கி, ஆரம்பம் தொடக்கம் ஓர் ஆரம்பக்கல்வி பாடசாலையாக மிளிர்கின்றது என்பது எமக்கெல்லாம் பெருமை சேர்த்த விடயம்.  எத்தனையோ கல்விமான்கள் அறிஞர்களை உருவாக்கி பெரும் சாதனை படைத்து இன்றும் சாதனையில் முதற்தர பாடசாலை யாக விளங்குகின்றது என்றால் அதன் பணியை நாம் எவ்வாறு போற்றுவோம்.

    அன்றுமுதல் இன்றுவரை பதவியேற்ற அதிபர்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களும் இப் பாடசாலையின் வளர்ச்சியை கண்டு கவனித்து கல்வியில் உயர்வடைய வைத்தனர்.  அந்தவகையில் 1888 ஆம் ஆண்டு தொடக்கம் பணியாற்றிய அதிபர்களை நாம் தெரிந்துகொள்ள முடியவில்லை.  ஆயினும் எமது பழைய மாணவர்கள், பெற்றோர்கள், முன்னைய ஆசிரியர்கள் ஆகியோரது ஒத்துழைப்புடன் குறிப்பாக திரு. சுரேந்திரன் (லவன்) அவர்கள் ஊரூராக, வீடுவீடாக அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்து ஆரம்ப காலத்து அதிபர்களான திரு. எஸ். கந்தவனம், திரு. ஆ. சுப்ரமணியம், திரு. ஜெ.க. செல்லத்துரை, திரு. சி. மயில்வாகனம் ஆகியோரது புகைப்படங்களையும் தகவல்களையும் சேகரித்த பெருமை அவரைச் சாரும்.  1900 ஆம் ஆண்டின் பின் கிட்டத்தட்ட தற்போதைய அதிபர் பதவி ஏற்ற காலம் வரை பத்து அதிபர்களை இனங் கண்டுள்ளோம்.  எனினும் அவர்கள் சேவையாற்றிய ஆண்டுகள் சரியாக எம்மால் எடுக்க முடியாது போனமை பெரும் குறைபாடாக உள்ளது.  இது பற்றிய தகவல்கள் யாராவது தரும் பட்சத்தில் இவ்வரலாற்றில் அதனை சேர்த்துக்கொள்ள நாம் தயங்கமாட்டோம்.  அந்தவகையில் இங்கு பணியாற்றிய அதிபர்களாக,
திரு. எஸ். கந்தவனம்
திரு. ஆழ்வாப்பிள்ளை தாவீது சுப்ரமணியம்
திரு. சின்னத்தம்பி மயில்வாகனம்
திரு. ஜேக்கப் கதிர்காமு செல்லத்துரை
திரு. தம்பு கந்தவனம் 
திரு. கந்தவனம் இராசரத்தினம்
திரு. சிதம்பரப்பிள்ளை வேலாயுதம்
திரு. சுப்பிரமணிய ஐயர் வரதராசசர்மா
திரு. வல்லிபுரம் கணேசமூர்த்தி
திரு. ஐயாத்துரை நடராஜா
திரு. நடராஜா தேவராஜா
இவர்களின் அயராத பணியே இன்று இத்தகைய உயர்விற்கு காரணம் எனலாம்.

    இவ் அதிபர்கள் ஒவ்வொருவரது காலப்பகுதியிலும் இருந்த ஆசிரியர்கள், மாணவர்களின் எண்ணிக்கைகள் சரியாக கிடைக்கவில்லை.  ஆயினும் இவர்களின் மகத்தான சேவையால் இப் பாடசாலை அன்றுதொட்டு முன்னணி பாடசாலையாக விளங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    மேலும் 1952 புதிய தேவாலயம் அமைக்கப்பெற்றதாகவும் அதனைத் தொடர்ந்து வகுப்புக்களில் நடைபெற்ற வழிபாடுகள், தேவாலயத்திற்கு மாற்றப் பட்டமையும் குறிப்பிடத்தக்கது.  ஈழத்தில் மெதடிஸ்த திருச்சபையால் உருவாக்கப்பட்ட 177 பாடசாலைகளில் இப் பாடசாலையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    1960 களில் மிசனரிகளிடமிருந்து அரசு பாடசாலைகளைப் பொறுப்பேற்றபோது இதுவும் பொறுப்பேற்கப்பட்டது.  தொடர்ந்து, மிஷனரியால் அன்று வழங்கப்பட்ட காணிக்குள் இருந்த கட்டடம் அதாவது பிரதான மண்டபத்துடன் இயங்கிவந்தமை குறிப்பிடத்தக்கது.  படிப்படியாக பாடசாலை களுக்கு அரச உதவிகள் கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பங்களில் இதுவும் சற்று விஸ்தீரணப் படுத்தப்பட்டது.

    அந்தவகையில் திரு. சி. வேலாயுதம் அவர்கள் அதிபராக இருந்த காலத்தில் தற்போதுள்ள அலுவலகம் அமைந்துள்ள கட்டடத்தின் முதல் தளம் அமையப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.  அவரது அயராத செயற்பாடும் பாடசாலை சமூகத்தினது பெரும் முயற்சியால் பாடசாலைக்கு தெற்கே உள்ள 3 பரப்பு காணி கொள்வனவு செய்யப்பட்டு அதற்குள் தற்காலிக கொட்டகை போடப்பட்டு வகுப்பறைகள் சற்று விரிவுபடுத்தப்பட்டன.

    உண்மையில் மிகவும் முக்கியமான காலகட்டம் என்றுதான் இதனைக் கூற வேண்டும்.  இவ்வளவு பெரிய நிலப்பரப்பை அதிபர் திரு. சி. வேலாயுதம், பழைய மாணவர் சங்கத்தின் மு. ச. சுப்பிரமணியம், திரு. மு. கதிரவேற்பிள்ளை, திரு. க. செல்வராசா ஆகியோருடன் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் பலரும் இணைந்து செயற்பட்டனர்.  இவர்களை வழிப்படுத்துபவராக சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசும் ஆகிய யு. மு. நடராஜா அவர்களின் பணியும் மகத்தானது.  இவர்கள் அன்று வீடுவீடாக சென்று பணம் 

சேர்த்து கொள்வனவு செய்தனர்.  இவ்வாறு அக் காணியைக் கொள்வனவு செய்த அனைவரையும் நாம் தெய்வமாக போற்ற வேண்டும்.  ஏனெனில் அப்படி ஒரு காணி கொள்வனவு செய்யப்பட்டு இருக்காவிடில் எமது பாடசாலை இன்று இத்தகைய எழுச்சி பெறுமா, அக்காலத்தில் அதற்காக பாடுபட்ட அன்புள்ளங்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நாம் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றோம்.

    திரு. சி. வேலாயுதம் அவர்கள் அதிபராக இருந்த காலத்தில் விளையாட்டுப் போட்டி, மாணவர்களுக்கான ஒழுங்கு விதிகள் என்பன வகுக்கப்பட்டு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதுடன் பாடசாலைக் கீதத்தை ஆக்கிய பெருமை அவரையே சாரும்.  இவருடைய காலத்தில் தண்ணீர் தாங்கியும் நிர்மாணிக்கப்பட்டது.

    தொடர்ந்து அதிபர் இடமாற்றத்தின்படி இவர் மாற்றலாக வேறு பாடசாலை சென்ற பின் திரு. சு. வரதராஜசர்மா அவர்கள் பாடசாலையைப் பொறுப்பேற்று குறைந்த காலம் மாத்திரமே நிருவகித்தார்.  அவரைத் தொடர்ந்து திரு. வ. கணேசமூர்த்தி அவர்கள் அதிபராக இருந்த காலத்தில் பாடசாலைமேலும் பௌதிக வளங்களாலும் கல்வியிலும் உயர்ந்து நின்றது.  இவர் சிறப்பான வழிநடத்தலில் விளையாட்டு விழாக்கள் மற்றும் பல்வேறு செயற்பாடு களை சிறப்பாக முன்னெடுத்து பாடசாலை யின் புகழை மேலும் உயர்த்தினார் என்றால் அது மிகையாகாது.

    தொடர்ந்து இவர் மாற்றலாகிச் செல்ல திரு. ஐ. நடராஜா அவர்கள் பாடசாலையை பொறுப்பேற்று திறம்பட நடாத்தினார்.  இவருடைய காலத்தில் புதிதாக வாங்கப்பட்ட காணியில் இருந்த தற்காலிக கொட்டகை அகற்றப்பட்டு புதிய கட்டடத்தின் அடித்தள வேலைகள் தொடங்கப்பட்டு முதல் இரு வகுப்புகள் நடாத்தப்பட்டு வந்தன.  எனினும் பாடச் செயற்பாடுகளிலும் பாடப்புறச் செயற் பாடுகளிலும் சளைக்காது முன்னேறியது.  2007 ஆம் ஆண்டில் தரம் 5 இல் 32 மாணவர்கள் சித்தியெய்தி யாழ்ப்பாண பாடசாலைகள் அளவிற்கு உயர்ந்த நிலையை அடைந்த பெருமை உண்டு.

    தொடர்ந்து அதிபர் ஐ. நடராஜா அவர்கள் மாற்றலாகிச் செல்ல திரு. ந. தேவராஜா அவர்கள் பொறுப்பேற்ற காலத்தில் தரம் 5 புலமையில் ஒரு வீழ்ச்சி காணப்பட்டாலும் தொடர்ந்த அவரது செயற்பாடும் ஆசிரியர்களின் விடாமுயற்சியும் பெறுபேறுகளின் உயர்ச்சிக்கு காரணமாயின.  இன்று பௌதீகவளத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியான ஓர் நிலையே இங்கு காணப்படுகின்றது.

    2010 ஆம் ஆண்டில் புதிதாக அமைக்கப்பெற்ற அதிபர் அலுவலகம் அதனைத் தொடர்ந்து நுமுளுP திட்டத்தின் மூலம் புதிதாக அமையப்பெற்ற இரண்டுமாடி கட்டடத்தின் கீழ் தள வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டு 40 ஒ 25 அளவுடைய நவீன நூலகம் அமையப் பெற்றது.  தொடர்ந்து 2011 ஆம் ஆண்டில் நுமுளுP திட்டத்தின் மூலம் புதிய மாடிக் கட்டடத்தின் மேல்தள வேலைகள் பூர்த்தியாகி 4 வகுப்பறைகள் கிடைக்கப்பெற்றன.  இது இப் பாடசாலையின் மாணவர்கள் சிறப்பாகக் கற்க வழிசமைத்தது எனலாம்.

    தொடர்ந்து பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், வலய கல்வித் திணைக்களம், மாகாண கல்வித் திணைக்களம் என்பவற்றின் ஒத்துழைப்போடு பல பௌதீகவளத் தேவைகள் பூர்த்தியாக்கப் பட்டன.

    2012 ஆம் ஆண்டில் 5000 பாடசாலைகள் செயற்றிட்டத்தின் கீழ் எமது பாடசாலையும் தெரிவுசெய்யப்பட்டு பல வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.  தொடர்ந்தும் எமது பாடசாலை கரவெட்டி கோட்டத்தில் சிறந்த பிள்ளை நேயப் பாடசாலையாக மிளிர்வதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

    தற்போது பெற்றோர்களதும் பழைய மாணவர்களதும் உதவிகள் சீரான முறையில் கிடைப்பதனால் சகல தேவை களையும் பூர்த்திசெய்யும் அளவிற்கு சிறப்பாக விளங்குகின்றது.  பாடசாலை அபிவிருத்தி சங்கம், பாடசாலை அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் சங்கம் என்ற முச்சங்கங்களும் போட்டியாக சிறப்பாக இயங்குகின்றமை பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரும் உந்து சக்திகளாய் உள்ளன எனலாம்.

    இதேவேளை பாடசாலையின் தெற்குப் புறத்தில் இருந்த 2 பரப்பு காணியையும் எட்டு இலட்சம் ரூபா செலவில் கொள்வனவு செய்வதற்கு கனடா வாழ் பழைய மாணவியான திருமதி ஜீவகுமார் வானதி முன்வந்தமை பாடசாலைக்கு கிடைத்த பேறு எனலாம்.  எனவே இப் பாடசாலை இன்று சகல வளங்களையும் கொண்ட ஓர் முன்னணி முன் மாதிரியான ஆரம்ப பாடசாலையாக விளங்குவது எமக்கு பெரும் ஆனந்தத்தை தருகின்றது என்றால் அது மிகையாகாது.